என் உலகம்

என் உலகம்
கனவுகளுடன் துளசி...

Sunday, June 2, 2013

தத்துவும் நானும்

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

இலங்கையில் இருந்து பல ஆயிரம் மைல் தாண்டி வாழ்வதால் இதற்கு முன் பல நண்பிகளின் திருமண வைபவங்களில் பங்கு பற்றும் பாக்கியத்தை இழந்து இருக்கிறேன். தூரத்தில் இருந்து வாழ்த்து அனுப்புவேன் - அந்த நாள் அவர்களின் நினைவுகள் பல ஞாபகத்திற்கு வரும். இம்முறை நான் செல்ல முடியாத மிக முக்கியமான திருமணம் - தத்துவின் திருமணம்.

தர்ஷனா - எப்போது நாங்கள் அவ்வளவு நெருக்கம் ஆனோம் என்று ஞாபகம் இல்லை. எட்டாம், ஒன்பதாம் வகுப்பாக இருக்கலாம் - எங்களுக்கு 15 வயது இருக்கும். ஒரு சிறு குழு அமைத்து விட்டோம் (ஷகீனா, நாதியா, தர்ஷனா, ரைசா, மபாஸா,ஷாகரி மற்றும் நான்) 
கொஞ்ச நாள் ஒன்றாக சுத்தி வம்பை விலைக்கு வாங்கினோம். ஒரு மாதிரி O/L முடிந்து 12ம் வகுப்பிற்கு நுழைத்து விட்டோம். குழு கொஞ்சம் பிரிந்து விட்டது படிக்கும் படிப்பை பொருத்து. நானும் தத்துவும் Maths class . மப்பி , ஷகீ - Science class. பிறகு நாதி, ரைசா, ஷாகரி - Commerce class.

எப்பொழுதும் எனக்கு அருகில் தத்து இருப்பாள். இரண்டு பெரும் பெரும்பாலும் எல்லா விஷயங்களையும் ஒன்றாகவே செய்வோம். ஆனால் இருவரும் இரு வேறு துருவங்கள் போல, ஆனால் அதை தாண்டி எங்களின் நட்பு வளர்ந்தது. நான் நெட்டை, தத்து குட்டை - உண்மையாவே எங்கள் வகுப்பில் இருந்த அனைவரையும் ஒன்றாக விட்டு பார்த்தால் நான் தான் எங்கள் வகுப்பிலேயே உயரம் - தத்துதான் குள்ளம். (சாரி தத்து)

எனக்கு ஆங்கிலம் நன்கு தெரியும், தத்துவுக்கு நன்கு தமிழ் தெரியும். நான் தத்துவிக்கு ஆங்கிலப்  பாடம்  நடத்த முயல்வேன் - தத்து என் தமிழில் பல குறை காண்பாள்.(அபரிதமான இல்லை, அபரிமிதமான என்று சொல்லி தருவாள்) :)

எனக்கு எங்கட வீட்டுல அப்பா காலையில் கட்டி தரும் பாண் பிடிக்காது. தத்துவுக்கு பாண் என்றால் உயிர். எங்கள் சாப்பாடு பெட்டி அடிக்கடி பரிமாறும். தத்துவின் அம்மாவிண்ட சாப்பாடு என்றால் எனக்கு உயிர். புளிச்ச கீரை பற்றி கேட்கவே வேண்டாம். இப்ப திரும்ப அங்கு போனாலும் அதை எனக்கு சமைச்சு தருவா ஆன்ட்டி. (கொஞ்ச நாளில எனக்கு நல்ல சாப்பாடு கிடைப்பதை கண்டு பொறாமை பட்டு பிரவீணா பெயர் சொல்லி தம்பியும் தத்து வீட்டுல வந்து சாப்பிட தொடங்கியது வேற கதை)

தத்துவை  வாழ்கையில மறக்க முடியாதவாறு பல காரியங்களை செய்துவிட்டாள். அதில ஒன்று என்னுடைய காலுக்கு ஒரு வீர தழும்பை தந்தது. (ஜெகா சேரின் வகுப்பு முடிய  Committee/ Prefect duty வேலைக்கு ஓடி இரண்டு பேரின் கால் சிக்குப்பட்டு விழுந்து நான் ஒரு உடைந்த பைப்பில் காலை அடிச்சு பெரிய காயத்தை எனதாக்கி கொண்டேன். பக்கத்தில் விழுந்த இந்த லூசு காலில ஒண்டுமே இல்லை - இப்ப சட்டை போட்டாலும் என் தழும்பு தெரியும்)

தத்துவின் கதைகளுக்கு சில சமயம் சிரிப்பு வரும் 
சில சமயம் எரிச்சல் கூட வரும் 
ஆனால் என்ன நடந்தாலும் என்னோடு தத்து வருவாள்.
என்னதான் பித்து கதை சொன்னாலும் 
தத்துவின் மனசு வெள்ளை :) (உஜாலா நீலம் போட்டு கழுவுவாள் போல)

ஒரு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டு காசு சேர்த்தாள் 
என் என்று எனக்கு புரியவில்லை 
ஒரு மாதம் கழிய என் பிறந்த நாளிற்கு அழகான ஒரு சோடி தோடு தந்தாள்.
கண்டு நான் திகைத்து போனேன் - அவ்வளவு கஷ்டப்பட்டு காசு சேர்த்தது இதற்காகவா என 
இப்படி ஒரு நண்பி கிடைக்க நான் குடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா
அதை நான் வீட்டில் காட்ட அப்பா சொன்னார் - கிருஷ்ணருக்கு குசேலன் அவல்  போல உனக்கு தர்ஷனா இவ்வளவு கஷ்டம் பட்டு தோடு வாங்கி வந்தாளா என்று. :)

தர்ஷனா செய்த செயல்களை சொல்லி முடிக்க முடியாது 
தமிழ் சங்கத்துக்கு தலைவியாய் இருக்க அவ்வளவு தகுதி இருந்தும் 
நான் விரும்பினால் தான் செயலாளர் பொறுப்பை எடுக்கிறேன் நீ தலைவி பொறுப்பை எடு என்று சொன்னவள். ஏன் என்றேன்? இருவரும் சேர்த்து கலைவிழா செய்வோம் என்றாள், எனக்கு எப்போதும் உன்னோடு சேர்த்து எல்லாம் செய்ய பிடிக்கும் என முடித்தாள்.
நல்ல காலம் அது நடக்கவில்லை. இவ்வளவு தமிழ் பற்று மிக்க தலைவியை எங்கள் பாடசாலை தமிழ் சங்கம் இழந்து இருக்கும்.நான் ஆங்கில இலக்கிய வட்டத்துக்கு தலைவி ஆக , தர்ஷனா தமிழ் சங்கத்துக்கு தலைவி ஆனாள்.
 (மேலே  உள்ள வரிகளை எழுதி விட்டு யோசித்தேன் நான் இவளின் நட்பை பாராட்டியது பத்தவே பத்தாது என்று)

போன வருட இறுதியில் நான் வீடு சென்ற போது கூட ஒரு அழகிய சேலையை பரிசு தந்தாள் என் நண்பி. வழமையாக வீட்டில் உள்ள பெரியவர்கள் தான் அன்பளிப்பு தருவார்கள், இப்ப நான் வேலை செய்வதால் யாருமே தருவது இல்லை. :( ஆனால் அன்பு நண்பி வேலை தொடங்கி விட்டேன் இந்தா என் அன்பளிப்பு என்றாள் - அமெரிக்காவுக்கு கொண்டு வந்து விட்டேன் அந்த சேலையை. :)

இப்படி பட்ட அன்பு நண்பிக்கு இந்த மாதம் கல்யாணம் - வேலை காரணமாக கலந்து கொள்ள வழி இல்லை. ரொம்ப கவலையாக இருந்தது - மனதில் இருக்கும் ஒரு பாரத்தை இறக்கவே எழுதினேன். திருமண பந்தத்தில் இணைந்து அன்பான குடும்பம் அமைத்து ஒரு அழகான வாழ்கை வாழ என் நல்லாசிகள். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க. (இந்த பதினாறு பாக்கியங்கள் பற்றி கூட மல்லிகா மேடம் அளவுக்கு எனக்கு சொல்லி தந்தது, தத்து தான்)


Monday, July 5, 2010

எனது டிஸ்னி வாழ்க்கை -4 (மேஜிக் இராச்சியம் - Magic Kingdom)

மேஜிக் இராச்சியம்















மேஜிக் இராச்சியம் (Magic Kingdom) என்று அழைக்கப்படும் டிஸ்னி உலகின் பெரிய இராச்சியத்தின் மாளிகை - சின்டரேலாவின் மாளிகை (Cindrella's castle)



மாளிகையின் இரவு தோற்றம்









ஆடி பாடும் மினி... (Minnie Mouse)





Friday, July 2, 2010

எனது டிஸ்னி வாழ்க்கை -3 (பிறந்த நாள் பரிசு )





அன்று காலையில் இருந்தே ஓயாமல் சிணுங்கி கொண்டு இருந்தது என் தொலை பேசி... நண்பர்களும், குடும்பத்தவர்களும் அழைத்து எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு இருந்தனர். முதல் நாள் இரவு என் வீடு புகுந்து பிறந்த நாள் கொண்டாடிய என் நண்பர்களின் அன்பை மூன்று முறை குளித்தும் தலையில் இருந்த கேக் இன் மனமும், என் வீட்டின் நிலமும் பறை சாட்டின.

அன்று பகலும் என் தொலைபேசி சிணுங்கல் நிற்க வில்லை. வகுப்பில் இருந்து நான் வெளிவந்த நான் வந்திருந்த வாழ்த்துகளை கேட்டு கொண்டு இருந்தேன், பிறந்த நாள் வாழ்த்துகளுடன் ஒரு இன்ப அதிர்ச்சியும் காத்திருந்தது. ஆம், டிஸ்னி இல் வேலை பயிற்சிக்காக (Internship) அழைத்து இருந்தனர். உண்மையிலேயே குதூகலமான நாளாக மாறிவிட்டது. இன்று வரை கடவுள் தந்த பிறந்த நாள் பரிசாக இந்த வாய்பை நான் நோக்குகின்றேன்.

* * *

வெகு சீக்கிரம் நான் டிஸ்னி செல்லும் நாள் வந்து விட்டது, சஞ்சலம் கலந்த நம்பிகையுடன் நான் ஒர்லாண்டோ நோக்கி பறந்தேன்... வழமையாக நான் எங்கு சென்றாலும் விமான நிலையத்தில் எனக்காக யாராவது காத்திருப்பர். இம்முறை யாருமே இருக்கவில்லை, உலகை தனியாக எதிர்நோக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டேன்.

இரண்டு நாட்களுக்குள் நான் டிஸ்னி வாழ்க்கைக்குள் பிரவேசித்து விட்டேன் என்பதை என் சுற்றுசூழல் சொன்னது. வாழ்க்கை ஒரு பரிசு என்றால் தினமும் கொண்டாட்டமாக தானே இருக்க வேண்டும்? டிஸ்னி உலகத்தில் தினமும் கொண்டாட்டம் தான்...


முதல் முதலாக Cindrella இன் மாளிகையை கண்ட பொழுதை என்னால் இன்றும் மறக்க முடியாது... கதைகளிலும், கனவுகளிலும் கண்ட ஒரு உலகம் அங்கே விரிந்து இருந்தது. இது நிஜமா என்று நானே என்னை கிள்ளி பார்த்து கொண்டேன்... நான் கண்ட அதிசயங்களை நீங்களும் காண வேண்டாமா?

தொடந்து படியுங்கள்....

Thursday, July 1, 2010

எனது டிஸ்னி வாழ்க்கை -2 (நேர்முகமில்லா தேர்வு)


மறுநாள் காலை மின்னஞ்சல் காணும் போது மனதில் ஒரு நப்பாசை... ஒரு வேளை உண்மையாய் இருந்து விட்டால்? இருக்கவே இருக்குது கூகிள். மின்னஞ்சல் அனுப்பியவரின் பெயரையும், தொல்லைபேசியையும் உள்ளிட்டு தேடினேன். நம்ப சில நொடி எடுப்பினும் உடனே புரிந்தது அது உண்மையான டிஸ்னி அஞ்சல் தான் என்று.... உடனே என் மனதில் ரஹ்மானின் இசை... சந்தோசமாய் சில நொடிகள் ஆடி பாடினேன்.

உடனே பதில் அனுப்பி விட்டு காத்து இருந்தேன். என்னை காக்க வைக்காமல் உடனே வந்தது பதில்... வெள்ளிகிழமை இரண்டு மணிக்கு தொல்லைபேசியில் நேர்முகமில்லா தேர்வு என முடிவானது. எனக்கு இருந்தது வெறும் இரண்டு நாட்கள் தான். என்ன தயார் செய்வது என்று தெரியாவிடினும் தொல்லைபேசியை சார்ஜ் பண்ணி தயார் பண்ணினேன். (சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் பாருங்கோ! ஹீ ஹி )

தொலைபேசியில் அழைத்ததும் என்னை பற்றி நிறைய கேள்வி கேட்டார்கள்... நானும் மூச்சு முட்ட பதில் சொன்னேன். டிஸ்னி வந்தால் நான் எப்படி பட்ட வேலை செய்வேன் என்று கேட்டனர். என்ன வேலை எண்டு சொல்லாமலே இப்படியா கேள்வி கேட்பது என்று மனதுக்குள் வைதுவிட்டு மிக புத்திசாலிதனமாக ராட்டினங்களை (Roller Coasters) பழுது பார்ப்பேன் என்று புளுகினேன் :) அவர்களும் சிரிக்காமல் கேட்டு கொண்டார்கள்...

* * *
தொடரும்

டிஸ்னி உலகம் - Walt Disney World


அமெரிக்காவில் மிக குதூகலமான இடம் எது என்று கேட்டால் கிடைக்கும் பதில் " டிஸ்னி உலகம்" (Disney World) என்பதுதான். எனது டிஸ்னி வாழ்க்கை பற்றிய கதை இது..ஏறத்தாள எட்டு மாதங்களுக்கு முன் எனக்கு கிடைத்த ஒரு மின்னஞ்சலுடன் ஆரம்பித்தது என் கதை....

அக்டோபர் மாதம் பொஸ்டனில் பனி (Snow) பெய்ய தொடங்கி விடும். அன்று கடவுள் எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தர போகின்றார் என்று உணராமல் நான் எழுந்து என் கணணி முன் அமர்ந்தேன். வழமை போல என் விரிவுரையாளர்களின் வகுப்பு விபரங்கள், வீட்டு வேலை, பரீட்சை அட்டவணை போன்ற தேவையற்ற அஞ்சல்களால் என் கணணி நிறைந்து இருந்தது.

அதற்கு நடுவில் ஒரு ஸ்பேம் அஞ்சலும் இருந்தது. டிஸ்னி இல் வேலை தொடர்பாக யாரோ ஒருவர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.. நான் டிஸ்னி வேலைக்கு விண்ணப்பிக்கவே இல்லை அதற்குள் எனக்கு தொலைபேசி முக தேர்வுக்கு (Telephone Interview) அழைத்து இருந்தனர். நைசீரியா வங்கி பணம், மின்னஞ்சலுடன் நனவாகும் வாழ்க்கை கனவுகள் தொடர்பாக நான் பல
அஞ்சல்கள் பார்த்து இருந்ததால் நான் அசரவே இல்லை... தொடரும்.
.